வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

மனிதப்பிறவி வேண்டுவதே இந்த மாநிலத்தே

மனிதப்பிறவி வேண்டுவதே இந்த மாநிலத்தே


தெய்வத்திருமணங்கள், அதிலும் ராஜாக்களின் வீட்டுத் திருமணங்கள் என்றால் தடபுடலுக்குக் கேட்க வேண்டுமா? மாமனும் ராஜா; மருகனோ இன்னொரு ராஜாவின் மகனான ராஜகுமாரன்; இருவரின் திருமணமும் ஒரே நாளில். மறுநாளோ அந்த மருகனின் தந்தையின் திருமணநாள். அதற்கடுத்த நாள் மாமன் வேறோர் ஊரில் திருமணம் புரிகிறான். இவற்றுக்கு முன்னும் இவர்களின் இல்லத் திருமணங்கள் சில என ஒரே கோலாகலம். (பங்குனி மாதம் உத்திரப் பெருநாள்தான் முக்கியமான பெருவிழா எனினும், பங்குனி மாத ஆரம்ப முதலே தமிழகம் திருமணக் கோலம் கொண்டு விடுகிறது.) ராஜாக்களின் வீட்டுத் தெய்விகத் திருமணங்கள் திமிலோகப்படுகின்றன. மனிதத் திருமண முகூர்த்தங்கள் அவ்வளவாக இல்லாத இந்த மாதத்தில் தெய்வத் திருமணங்களுக்கு மட்டும் குறைவே இல்லை.

ராஜா என்றதும் ஞாபகம் வருகிறது. கவிஞன் என்றாலே ஏழைமை என்பது உடன் பிறந்தது போலிருக்கிறது. இப்படி வாடியதொரு கவி மனம் வெதும்பிக் கூறுகிறான். “இரண்டு ராஜாக்கள் இங்கு ஆள இருந்தும் எங்களைக் காப்பாரில்லை.” என. இரண்டு ராஜாக்களின் இருப்பிடமும் ‘கோவில்’ எனப்படுகின்றன. ஒருவர் நடராஜா; மற்றொருவர் ரங்கராஜா. இவர் நடராஜாவுடனேயே கோவிந்தராஜாவாக அவரது கோவிலிலேயே வேறு குடியிருக்கிறார். “இருந்தும் என்ன பயன்? ஒருவன் பொறுப்பற்று சதா கூத்தாடிக் கொண்டிருக்கிறான். மற்றொருவனோ சதா உறங்கிக் கொண்டிருக்கிறான். இருவருமே எங்களைக் காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை.” எனப் புலம்புகிறான் இந்தக் கவி. இதற்கு போஜராஜன், தான் காளிதாசனுடன் சேர்ந்து இயற்றிய ‘சம்பு இராமாயணத்’தில் பதில் கூறுகிறான். “இந்த ராஜா (ரங்க ராஜா) உறங்கினால் என்ன? எழுந்தான் என்றால் நான்கு விஷயங்களை ஒரே சமயத்தில் பிளந்து கட்டிவிட்டுத்தானே மறுபடி உறங்கச் செல்கிறான். பாருங்கள்! ஒரே மூச்சில் பிரஹலாதனின் தாபம், சபையின் தூண், ராக்ஷஸர்களின் கர்வம், ஹிரண்யகசிபுவின் மார்பு, என நான்கையும் பிளந்து கட்டிவிட்டான் அல்லவா?” என்கிறான்.

இப்போது தெய்வத் திருமணங்களை சற்று காண்போம். மாதம் பிறந்த உடனேயே (பங்குனி 9ஆம் தேதி) கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணிப் பெருமாள் கோவில் வைபவம் ஆரம்பமாகிறது. சிவ அம்சம் மிகுந்த இந்தப் பெருமாள் ஒரு காலத்தில் அதி உக்ரராக இருந்த காரணத்தாலும், காவிரியின் கரையிலுள்ள ஸ்மசானத்தை நோக்கி இருக்கும் காரணத்தாலும், இவரது உக்ரத்தைத் தணிக்க இவரது சந்நிதியிலேயே சுதர்சனவல்லித் தாயார் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பினும் இவரது திருமணம் மட்டும் விஜயவல்லி தாயாருடனேயே விமரிசையாக மேற்கூறிய தினத்தில் நடைபெறுகிறது. இவருக்கு மட்டும் விசேஷமாக வில்வத்தினால் அர்ச்சனை நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து ராஜகோபாலனாக மன்னார்குடியில் விளங்கும் மற்றொரு ராஜாவின் திருமணம் (பங்குனி 15ஆம் தேதி) விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.)

அடுத்து பங்குனி 17ஆம் தேதி திருவாரூர் திருக்காட்டுப்பள்ளி, லால்குடி முதலிய இடங்களில் பங்குனி உத்திர உற்சவப்பெருவிழா கொண்டாட்டங்கள் களைகட்டி விடுகின்றன.

சேவகம் செய்தாலும் ராஜாவின் வீட்டில் சேவகம் செய்யவேண்டும். அதுவும் ராஜாவுக்கு வலக்கையாகவும், மனத்திற்கினியவனாகவும் இருந்து விட்டால் கொண்டாட்டம்தான். ஸர்வேஸ்வரனாகவும், மஹாதேவனாகவும் இருப்பவருக்கு இப்படி இனியவராகவும், வாகனமாகவும் விளங்கும் சுயசாம்பிகையுடன் திருமண மஹோத்சவத்தை திருமழபாடியில் தன் சொந்த மகனின் திருமணம் போல், பங்குனி 21ஆம் தேதியன்று விமரிசையாக நடத்தி வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து மயிலத்தில் முருகப்பெருமான் திருமாலின் கண்மலர்ச் செல்வியான சுந்தரவல்லிக்குத் தான் வாக்களித்தபடி வேடராஜ புத்திரியான வள்ளியாக அவதரித்த அவளை பங்குனி 24ஆம் தேதி கடிமணம் புரிந்து வெள்ளிக் குதிரை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.

மறுநாள் காஞ்சிமாநகரில் தந்தை ஸ்ரீஏகாம்பரநாதராக கம்பா நதிக் கரையில் தன்னை மணக்கத் தவம் புரியும் காமாக்ஷி அன்னையைத் திருமணம் புரிந்து தங்கரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

பங்குனி 26ஆம் தேதி பங்குனி உத்திரப்பெருநாள். இன்றுதான் ரங்கராஜாவின் திருமணம் ரங்கநாயகி தாயாருடன் நடைபெறுகிறது. படிதாண்டாப் பத்தினி என கற்புக்கரசியரை உலகியலில் கூறுவர். உண்மையில் படிதாண்டாப் பத்தினியாக தனிக்கோவில் கொண்டு ஸ்ரீரங்கத்தையே தன் ஆளுகையில் வைத்திருப்பவள் ஸ்ரீரங்கநாயகி தாயார். தனிக்கோவில், தனிப் பள்ளியறை என தனித்து வாழும் தாயார் என்றுமே தன் கோவில் படி தாண்டுவதில்லை. பங்குனி உத்திரத்தன்று மட்டுமே, தன் திருமண தினம், என்பதால் ஸ்ரீரங்கநாதரோடு சேர்ந்து காட்சி தருகிறாள். மற்றபடி தாயாருக்கு பெருமாளிடம் ஈடுபாட்டிலோ, பக்தியிலோ குறைவென்றும் கூறிவிடமுடியாது. பெருமாளின் திருப்புறப்பாடு தன் கோவில் வாசலில் வந்து சேரும் ஒவ்வொரு சமயத்திலும், அவரைக் கண்குளிரக்காண தாயார் ஒருக்களித்து அமர்ந்து விரல்களை ஊன்றி பெருமானின் அழகினை ரசிக்கும் இடமே, ‘ஐந்து குழி மூன்று வாசல்’ என புகழ் பெற்று விளங்குகிறத். தாயாரை பெரிய பிராட்டி எனவும் கூறுவர். ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியது. பெருமாள் பெரிய உருவம்; தாயாரோ பெரிய பிராட்டி; ஆலயமோ பெரியது; ஊரோ பேரரங்கம்; தளிகை பெரிய அவசரம்; பக்ஷணம் பெரிய திருப்பணியாரம்; வாத்தியமும் பெரிய மேளம். ஆலயம் பெரியது எனக் கண்டோம். எவ்வளவு பெரியது தெரியுமா? சப்த லோகங்களும் இதன் ஏழு மதில்களில் அடக்கம். மாடங்கள் சூழ்ந்த முதல் சுற்று பூலோகம்; திருவிக்கிரம சோழன் சுற்று புவர் லோகம்; கிளிச் சோழன் சுற்று ஸுவர் லோகம்; திருமங்கை மன்னன் சுற்று மஹர் லோகம்; குலசேகரன் சுற்று ஜநோ லோகம்; ராஜமகேந்திரன் சுற்று தபோ லோகம்; ஏழாவதான கருவறைச் சுற்று சத்ய லோகம். இவை ஏழையும் கொண்ட நெடுஞ்சுற்றுக்கு ‘அடைய வளைந்தான்’ எனப் பெயர். ஸ்ரீரங்கநாயகி பெரிய பிராட்டியாக அரசாளவதும், ஸ்ரீரங்கநாதர் ரங்கராஜாவாக விளங்குவதும் அதிசயமில்லையல்லவா? உண்மையில் ஸ்ரீரங்கநாதருக்கும் முன்பே ஸ்ரீரங்கத்தில் வந்து குடியேறி அவருக்காக காவிரிக் கரையில் காத்திருந்தவள் ரங்கநாயகி தாயார். அந்த வரலாற்றைச் சிறிது காண்போம்.

வருணனின் பிள்ளையான பிருகு முனிவருக்கு ஒரு நீண்டநாள் ஆசை, பாற்கடலுதித்த திருமகள் தன் மகளாக இருக்க வேண்டும், அவளைத் திருமாலுக்கு மணம் முடித்து தான் திருமாலுக்கு மாமனார் என்னும் பெருமையை அடையவேண்டும் என. இப்பேறு கிட்டினால் உலகத்தார் கண்முன் தன் மரியாதையும் அதிகரிக்குமே! தவமிருந்தார். பார்கவி என்ற உருவில் அவளைத்தன் மகளாகவும் அடைந்தார். அவள் தக்க பருவத்தை எய்தியதும், ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு மணமுடித்து தன் ஆசைப்படி அவரைத் தன் மருமகனாகவும் அடைந்தார் கலகப்பிரியரான நாரதர் ஒருநாள் பிருகுமுனிவரிடம் “இம்மூர்த்திகளில் சாந்தம் நிறைந்தவர் யார்?” என வினவ, தன் மருமகனான ஸ்ரீவிஷ்ணுதான் சாந்தம் நிறைந்தவர் என பதிலுறுத்தார் முனிவர். அதை நிரூபிக்க வைகுண்டமும் ஏகினார். இந்த நாடகத்தைப் பெருமாள் அறியாதவரா என்ன? திருமகளை தன் மார்பில் இருத்தி அவரை கவனியாதவர் போல் யோக நித்திரையில் ஆழ்ந்தார். “மதிப்பு மிகு மாமானார் வந்திருக்கிறேன். என்னைக் கவனியாது, வரவேற்காது, மரியாதை செலுத்தாது உறக்கமா?” என வெகுண்டு முனிவர் திருமாலின் மார்பில் உதைத்தார். திருமாலும் பணிவுடன் எழுந்து “கௌஸ்துபமென்னும் கல் பதித்த என் மார்பில் உதைத்ததனால் தங்கள் பாதத்திற்கு அடிபட்டு விட்டதா?” என அவருடைய பாதத்தை வருடி, அதே சமயத்தில் இயற்கையிலேயே அம்முனிவருக்குப் பாதத்தில் வாய்த்திருந்த கண்ணினையும் போக்கிவிட்டார். முனிவரின் கர்வம் ஒழிந்ததெனினும், அவர் கூறியபடி திருமாலே சாந்தம் நிறைந்தவர் என நிரூபித்தவராக அவர் ஆனார் எனினும், திருமாலின் மார்பில் குடிகொண்ட திருமகள், “நானிருக்கும் திருமார்பினை உதைத்தவரின் காலை நீங்கள் வருடுவதா?” என வெகுண்டு பெருமாளை விட்டு நீங்கினாள். பிறகு அவர் திருமலையில் இருப்பதாக நாரதர் மூலம் கேள்விப்பட்டு அங்கும் அவரைக் (பெருமாள் இதற்கிடையில் பத்மாவதியை மணந்திருந்தார். நாரதர் மூலம் திருமகள் கோபத்துடன் தன்னைத் தேடி வருவதாகக் கேட்டு அங்கிருந்தும் அகன்றார்.) காணாது காவிரிக் கரையினை அடைந்து, பெருமாள் தன் தவறுணர்ந்து தன்னைத் தேடிவரும் நாளை எதிர்நோக்கி அங்கே ரங்கநாயகியாகக் காத்திருந்தாள்.

ஸ்ரீரங்கநாதரும் சூரியனாலும், அவனால் தரப்பட்டு மனுவினாலும், அவர் வழிவந்த சூரியவம்ச அரசர்களாலும் வழிவழியாக ஸ்ரீஇராமர் காலம் வரை ஆராதிக்கப்பட்டு, இராமபட்டாபிஷேகத்திற்குப் பிறகு விபீஷணனால் விரும்பிக் கோரப்பட்டு, தான் வணங்கிய விநாயகப் பெருமானால் அந்தணச் சிறுவன் உருவில் வழிமறிக்கப்பட்ட விபீஷணனை ஏமாற்றி அவரால் தந்திரமாக மீட்கப்பட்டு காவிரிக் கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். தனக்காக அங்கு காத்திருந்த ஸ்ரீரங்கநாயகி தாயாரையும் பங்குனி உத்திரப் பெருநாளில் மணந்தார்.

பின் ஏன் இத்துணை காலத்துக்குப் பிறகு திருமாலோடிணைந்தும் ரங்கநாயகி தாயார் தனியே கோவில் கொண்டிருக்க வேண்டும் என வியக்கத் தோன்றுகிறது அல்லவா?

எந்த ஒரு மனைவியும் தன் கணவன் தனக்கு மட்டுமே உரியவனாக இருக்க வேண்டும் என்று தானே விரும்புவாள்? ரங்கநாதருக்கோ தேவியர் எழுவர். கர்ப்பக் கிருஹத்தில் தேவியர் இல்லை எனினும், தேவியர் இல்லாமல் இல்லை. உற்சவராக நின்ற திருக்கோலத்தில் அழகிய மணவாளர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தங்க மஞ்சத்தில் எழுந்தருளுகிறார். ரங்கநாதருக்கு உகந்த அரசி உறையூர் கமலவல்லி. உறையூரை அரசாண்ட சோழன் மகள் இவள்; தென்னரங்கரை நேசித்து மணந்தவள். கமலவல்லியைப் போல் சேரமன்னன் குலசேகரன் மகள் சேரகுலவல்லியையும் காதல்மணம் புரிந்துள்ளார். மகளாக வளர்ந்த ஆண்டாள் ரங்கநாதப் பெருமானைக் காதலிக்க அவளையும் ரங்கமன்னாராக மணந்துள்ளார் ஸ்ரீரங்கநாதர். டெல்லி பாதுஷாவின் மகள் ஒருத்தியின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு அந்தத் துலுக்க நாச்சியாரையும் மணந்துள்ளார் ஸ்ரீரங்கநாதர். இன்றும் பங்குனிப் பெருவிழாவில் ஆறாவது தினத்தில் உறையூர் சென்று ரங்கன் கனகவல்லி நாச்சியாரை மணந்து ஒன்பதாவது தினம் மீண்டும் ரங்கநாயகியைக் காண வரும்போது ‘என்னைப் பார்க்க வரக்கூடாது’ என தாயார் திருக்கதவம் சாத்தி ‘பிரணய கலஹம்’ செய்வதும் இந்தப் பிணக்கை நம்மாழ்வார் வந்து சமாதானம் செய்து சேர்ந்திருக்கச் செய்வதும் அரங்கேற்றப்படுகிறது. ஆனால் எவ்வளவு முறைதான் தாயாரும் சகிப்பாள்? அழகிய மணவாளராக இருப்பதும், அதனால் மற்ற நாச்சியார்கள் அவரை மணக்க விழைவதும் வழக்கமாகிவிட்டது. அதனால்தான் ஸ்ரீரங்கநாயகி தாயார் தனியே கோவில் கொண்டு விளங்குவதுடன் உற்சவ காலங்களில் கூட வெளியே எழுந்தருளுவதில்லை.

இதே பங்குனி உத்திரத்தன்று திருச்செந்தூரில் முருகப்பெருமான் முன்னர் தான் வாக்களித்தபடி திருமாலின் செல்வியான சுந்தரவல்லியை வேடராஜ புத்திரி வள்ளியாக திருமணம் புரிந்தார். முன்னம் கந்தனை மணமுடிக்க விழைந்து, திருமாலின் கண்மலர்ச் செல்விகளான அமிர்தவல்லியும், சுந்தரவல்லியும் தவமிருந்தனர். அவர்களை தான் அவதரித்த காரணமான சூரபத்மரின் வதம் முடிந்ததும் இந்திரனின் மகளான தேவயானையாகவும், வேடராஜ புத்திரியான வள்ளியாகவும் ஏற்பதாகக் கூறி அப்படியே இந்திரனின் மகனான ஜயந்தனைச் சிறை பிடித்த சூரபத்மனுடன் தேவர்களின் சேனைக்குத் தலைமை தாங்கி பத்து தினங்கள் போரிட்டு வென்று, இறுதியில் சூரசம்ஹாரம் செய்து அவனை சேவலாகக் கொடியிலும், மயிலைத் தன் வாகனமாக ஆக்கியும் ஆட்கொண்டார் ஆறுமுகக் கடவுள். அதற்குக் கைம்மாறாகத் தன் மகள் தேவயானையை அவருக்கு மணமுடித்தான் இந்திரன்.

பின்னர் நாரதரின் கலகத்தினால் விளைந்த நன்மையாக வேடராஜனின் வளர்ப்பு மகளான வள்ளியை வேடன், வேங்கை மரம், விருத்தனென பல உருமாறி கைத்தலம் பிடித்தார் முருகப் பெருமான், தன் மாமன் ஸ்ரீரங்கநாதர் மணமுடித்த அதே பங்குனி உத்திரத்தன்று. வல்லி என்றால் கொடி; கொடியானது (வேங்கை) மரத்தினைச் சுற்றிப் படருவது இயற்கையேயல்லவா!

மாமன், மருகன் இருவரின் மணமும் முடிந்த இந்த பங்குனி உத்திரப் பெருநாளுக்கு மறுநாள் (பங்குனி 27ஆம் தேதி) மயிலையில் கபாலீச்வரராக அமர்ந்த சிவ பெருமானின் திருக்கல்யாணம் அன்னை கற்பகாம்பிகையுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மயிலாக உருமாறி புன்னை மரத்தின் அடியில் தவம் செய்த அன்னையை சிவபெருமான் கபாலீச்வரராகத் தோன்றி ஆட்கொண்டு மணமுடித்தது அன்றுதான். அகிலத்துக்கெல்லாம் படியளக்கும் சிவனாரும், அன்னை முன் ஒரு பிட்சாடனரே. அவளருளால் அகிலமெல்லாம் காக்கிறார் கபாலி. அவருக்கே பிட்சை ஏற்க ஒரு பாத்திரமின்றி பிரம்மனின் கபாலத்தையே ஏந்தித் திரிகிறார் எனில் நாம் எம்மாத்திரம்? மானிடரான நம் கர்வத்தை போக்கியருளவே அவர் கபாலியாகிறார்.

இதற்கு மறுநாள் (பங்குனி 28ஆம் தேதி) அதே திருமாலானவர் சாரங்கபாணியாக கும்பகோணத்தில் திருமணக்கோலம் கொண்டு காட்சியளிக்கிறார். முன் வைகுந்தத்தில் பிருகு முனிவர் தானுறையும் திருமாலின் திருமார்பில் உதைத்தபோது அதைப் பொறுத்த தன் கணவரிடம் மட்டுமல்லாது தன் தந்தையான பிருகு முனிவரிடமும் வெகுண்ட பார்கவி, அவருக்கும் தனக்குமான உறவை உதறித்தள்ள, திருமகளை மீண்டும் தன் மகளாக அடைய விழைந்தார் பிருகுமுனி. இந்தப் பிராயச்சித்தத்தை சாதிப்பதெப்படி? பெருமாளை நோக்கித் தவமியற்றினார். பெருமாளும் மனமிரங்கி அவருடைய தவத்திற்கிணங்கி குடந்தைப் பகுதியில் தவமியற்றி காத்திருக்கும்படி அருள் வழி காட்டினார். தானும் முன் நாம் கண்டபடி திருமலைக்கு ஏகி, அங்கு பத்மாவதியை மணந்தபிறகு நாரதர் வாயிலாக திருமகள் தன்னைத் தேடி கோபத்துடன் வருகிறாள் எனக் கேட்டு, அங்கிருந்தும் நீங்கி குடந்தைக்குச் சென்று பாதாள சீனுவாசனாகக் காத்திருந்தார். தாயாரும் பெருமாள் மீது கோபம் தீர்ந்தவராக அத்தலத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தில் தாமரை இதழ்களில் ஒரு குழந்தை உருவெடுத்தாள். அவளை, ஹேமரிஷி என அங்கு அறியப்பட்ட பிருகு முனிவர் எடுத்து, கோமளவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். பெருமாளும் அவளைத் தக்க தருணத்தில் சாரங்கபாணியாக, வைகுந்தத்திலிருந்து வந்த வைதிக விமானமென்னும் தெய்விகத் தேரிலேறித் திருமணம் புரிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்தத் திருமணத்தைத் தான் பங்குனி 28ஆம் தேதி கண்டு மகிழ்கிறோம்.

இவ்வாறு பங்குனி மாதம் முழுவதும் தெய்விகத் திருமணங்களை அடுத்தடுத்து கண்டுகளிக்கும் பேறு கிடைக்குமெனில் ‘மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ எனவும் ‘யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்’ எனவும் பாடத் தோன்றுகிறதல்லவா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக